சென்னை: சொத்து குவிப்பு வழக்குதொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, அவருக்கு சொந்தமான 27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருட்கள் இன்று தமிழ்நாடு அரசிடம் பெங்களூர் நீதிமன்றம் ஒப்படைக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் வாரிசுதாரரான ஜெ.தீபா, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், அவரது வாரிசான தனக்கும், தனது சகோதரருக்கு மட்டுமே சொந்தம் என்றும், அதை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இதுவரை விசாரணைக்கு வராத நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தமிழ்நாடு அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் வருமானத்தக்கு அதிகமான சொத்துகளை குவித்ததாக 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்த போது 11,344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச், 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனால் அவரது போயஸ் தோட்ட வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்த நகைகள், பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத் திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்ப்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
அப்போது ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டே காலமாகிவிட்டதால் மற்ற மூவரும் 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையை அனுபவித்தனர். மேலும் ஜெயலலிதா வுக்கு விதிக்கப்பட்ட ரூ 100 கோடி அபராதத்தை கைப்பற்ற அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகளை ஏலம் விட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மூவருக்கும் தலா 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக் கோரி ராமமூர்த்தி என்பவர் மனுதாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் நகைகளை கர்நாடகா அரசு ஏலம் விடுவதற்கு பதில் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும், நகைகளை அவர்கள் பெற்றுச் செல்வதை பதிவு செய்ய வீடியோ, போட்டோகிராபர்கள் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட நீதிபதிகள் விதிமுறைகளை வகுத்திருந்தனர்.
இந்த சொத்துக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக அரசிடம் இந்த பொருட்களை ஒப்படைக்க இருந்த நிலையில் கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணனின் மகள் ஜெ.தீபாவும் மகன் ஜெ.தீபக்கும் மனுதாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் சொத்து வாரிசுதாரரான எங்களுக்கு சொந்தமானது என உரிமை கோரினர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஜெ.தீபாவின் மனுவை கடந்த ஜனவரி 13 ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களும் ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளின் ஆவணங்கள் உள்பட 465 பொருட்களை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு சரி பார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
நீதிபதியின் முன்னிலையில் தங்க, வைர நகைகள், நகை மதிப்பீட்டாளர் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு அவை முழுக்க வீடியோ, புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி மற்றும் தமிழக அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதற்கிடையில், கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தீபா, தீபக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த மனு விசாரணைக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.