கோவை

கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கோவையில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.  நேற்று இங்கு 229 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 2,39,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 2,306 பேர் உயிர் இழந்து 2,34,875 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,225 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இது தமிழகத்தில் மிகவும் அதிகமான எண்ணிக்கை ஆகும்.  இதையொட்டி கொரோனா சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இங்குப் படிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 மாணவிகளுக்கு முதலில் தொற்று ஏற்பட்டு அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்குப்  பரவி உள்ளது.  கேரளாவில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தும் இந்த பரவல் ஏற்பட்டுள்ளது.,

எனவே தற்போது கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஞாயிறு அன்று அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மூட உத்தரவு இடப்பட்டுள்ளது.   அனைத்து மால்கள், நகைக்கடைகள், துணிக்கடைகள் ஊழியர்கள் இரண்டு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி உழவர் சந்தைகள் 50% கடைகளுடன் சுழற்சி முறையில் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.   பொள்ளாச்சியில் உள்ள மாட்டுச் சந்தை உள்ளிட்ட சந்தைகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   உணவு விடுதிகள் மற்றும் பேக்கரிகள் ஞாயிறு அன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் எனவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.