ஜம்முகாஷ்மீர்:
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி குழுவினரின் திடீர் தாக்குதலில் 41சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சென்ற வாகனங்களின்மீது ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத குழுவினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீர் அவந்திபுரா பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய காரில் வந்த தீவிர வாதிகள் திடீரென ராணுவ வாகனத்தை குறி வைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வாகனங்கள் உள்பட ஏராளமான சிஆர்பிஎப் வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். வீரர்களின் உடல்பாகங்கள் ஆங்காங்கே சிதறியதால், அந்த இடமே போர்க்களம் போன்று காட்சியளித்தது. மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த பல வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்துக்கு பாகிஸ்தான் நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோ சிக்க பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை இந்த தாக்குதல் ஏற்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.