டில்லி,

ஓகி புயலின் பாதிப்பு காரணமாக கடலுக்கு சென்ற மீனவர்களில் 433 மீனவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்றும், அவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

கடந்த 30ந்தேதி தமிழகத்தில், குமரி மாவட்டத்தை  ஓகி புயல் புரட்டி எடுத்தது. புயல் குறித்து மத்திய மாநில அரசுகள் சரியான தகவல்கள் தெரிவிக்காததால், கடலில் மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான குமரி மாவட்ட மீனவர்கள் புயலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோரை காணவில்லை.

நூற்றுக்கணக்கானோர் மற்ற மாநிலங்களில் கரைசேர்ந்த நிலையில், மேலும் 433 மீனவர்கள் மாயமாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

காணாமல் போன மீனவர்களின்  கதி என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும், மீனவர்களை கணக்கெடுக்கும் பணியும் நடைபெறுவதாகவும் கூறிஉள்ளது.

மொத்தம் 619 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அதில் 433 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.