சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்ச் அமைப்பாளராக செயல்படும் வாய்ப்பு, 42 வயதான ரமேஷ் குமார் என்பவருக்கு கிடைத்துள்ளது.
அதேசமயம், முதல்தர கிரிக்கெட் போட்டிக்கு, இதுவரை எந்த பிட்ச்சையும் தயார்செய்த அனுபவமில்லாதவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூரை சொந்த ஊராக கொண்ட இவர், கார்மென்ட்ஸ் தொழில் துறையில் ஈடுபட்டு வருபவர்.
தனது சொந்த ஊரான திருப்பூரில், மாணாக்கர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை செழுமையூட்ட, ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் என்ற பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக, சேப்பாக்கம் மைதானத்தை தயார்செய்ய வேண்டிய பொறுப்பு இவரை நாடி வந்துள்ளது. மிகக் குறுகிய நாட்களில், இவர் தனது பணியை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.
“தமிழ்நாட்டு கிரிக்கெட் அசோசியேஷனிலிருந்து எனக்கு அழைப்பு வந்தவுடன் நான் ஆச்சர்யம் அடைந்தேன். எனக்கு வழங்கப்பட்ட பெருவாய்ப்பை ஏற்பது குறித்து 2 நாட்கள் மட்டுமே அவகாசம் கேட்டேன். ஏனெனில், குறுகிய நாட்களுக்குள் எனது பணியை சிறப்பாக நிறைவு செய்யவேண்டியது தொடர்பாக, எனது குடும்பத்துடன் கலந்தாலோசனை செய்ய வேண்டியிருந்தது” என்றுள்ளார் ரமேஷ் குமார்.