கேரளா

கேரளாவில் 41 கர்ப்பிணிகள் கொரோனாவால் மரணம் அடைந்ததாகவும் 149 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொடர்பாக கேரளா மாநில சட்டப்பேரவையில்  கேள்விகள் எழுப்பினார்.   இதற்குக் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் வீணா ஜார்ஜ் பதில் அளித்துள்ளார்.

வீணா ஜார்ஜ், ”கேரள மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் நோய் எதிா்ப்பு சக்தியைப் பெற்று விட்டனர். கடந்த ஆண்டு ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையின்படி கேரளாவில் கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்டோர் விகிதம் கடந்த 2020, மே, ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் முறையே 0.33%, 0.88% மற்றும் 11.6% ஆக இருந்தது. 2021 மே மாதத்தில் 44.4 சதவீதமாக இருந்தது.

தற்போதைய ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பரில் மாநில அரசு நடத்திய நோய் எதிர்ப்பாற்றல் ஆய்வில் இது 82.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது கேரளாவின் மொத்த மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களில் 93.3 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டனா். ஆகவே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா நோயாளிகள் 149 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 41 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.