சென்னை:  விழுப்புரத்தில் பல ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அந்த ஆசிரமத்தில் மனநலம் சம்பந்தப்பட்ட 41ஆயிரம் மாத்திரைகள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். ஏழை எளிய மக்கடள், மாற்றுத்திறநாளிகள், மனநலம் பாதித்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இந்த ஆசிரம் செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தில் இருந்து பலர் காணாமல் போனதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.  இதனால், உடல் உறுப்புகளுக்கான மனித கடத்தலாக இருக்கலாம்  என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரை சேர்ந்த சபீருல்லாவை காணவில்லை எனக்கோரியும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கான் என்பவரின் நண்பர் ஹலிதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் மற்றும் நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோதுதான், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், வழக்கு பதிவு செய்து,  ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் பிஜி மோன், கோபிநாத், முத்து மாரி, சதீஷ், பூபாலன், அய்யப்பன், தாஸ் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.  இதில் மனநலம் குன்றிய தாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 பேரை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்தனர். இவர்களிடம் விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது

இவர்களில் முத்து மாரி, சதிஷ் ஆகியோருக்கு மனநிலை சரியில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஜூபின் பேபி உள்பட 6 பேரிடம் இன்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூபின் பேபி உள்பட 6 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் விசாரணை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. , ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் அறிக்கையை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் தாக்கல் செய்தார். அறிக்கையை இதையடுத்து, சலீம்கான் நேரில் வந்து அடையாளம் காட்டுவது தொடர்பாக விளக்கமளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும், முறைகேடுகள் தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த 8 பேர் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் 8வகையான 41,009 மனநல மாத்திரைகள் ஆசிரமத்தில் இருந்தது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் மாத்திரைகள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என தெரியவில்லை.

தமிழக, கர்நாடக போலீசாரின் போலி லெட்டர் பேடு, சீல்களை பயன்படுத்தி ஆசிரம வாசிகளை இடமாற்றம் செய்தது அம்பலமாகியது. குரங்குகளை வைத்து ஆசிரமவாசிகளை அச்சுறுத்தியதும் அம்பலமானது. ஆசிரமத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்களிடம் விசாரித்த பின் முழு விபரம் தெரியவரும்.

அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட நபர் பெங்களூருவில் புதைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து தப்பிய ஜெபருல்லாவின் அடையாளத்தில் ஆண் சடலம் பெங்களூருவில் கடுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருக்கும் ஜெபருல்லாவின் உறவினர்கள் ஒத்துழைத்தால், டிஎன்ஏ பரிசோதனை செய்ய தயார்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.