சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒராண்டில் கோவில்கள் தொடர்பாக 4077 புகார்கள் பெறப்பட்டுள்ளன என  அறநிலையத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தில்  கடந்த ஒரு வருடத்தில் 4077 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு மே மாதம்  பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்கான பொதுமக்கள் குறை கேட்பு   சிறப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 04428339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு திருக்கோயில் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றும், பொதுமக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். கோரிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புதல் கோரிக்கைதாரர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.

மேலும் இதுவரை சிறப்பு மையம் தொடங்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து 4077 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் முழுமையாக நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்ட மனுக்கள் 351, நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வரும் மனுக்கள் 3279, நிராகரிப்பட்ட மனுக்கள் 447. இக்குறைக் கேட்பு மையத்தில் திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பற்றிய புகார்கள் அதிகம் வரப்பெற்றுள்ளன. மேலும், 1550 கோரிக்கைகளில் திருக்கோயில் பற்றிய தகவல்கள், திறந்திருக்கும் நேரம், இருப்பிடம், வழித்தடம், தங்கும் விடுதிகள் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் நிர்வாகத்தின் சார்பில் பதில்கள் அளிக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் குறைகள் தீர்க்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.