இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க நேரடியாக களமிறங்கியுள்ளதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹ்ரைன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை அமைத்துள்ள நிலையில் இதன் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இதற்கு ஈரான் பதிலடி கொடுக்க நினைத்தால் அதன் விளைவுகள் அதிபயங்கரமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் வரைபடத்தை வெளியிட்டுள்ளதுடன் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
இதையடுத்து, மத்திய கிழக்கில் உள்ள 40,000க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் ஈரானின் பதில் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்களின் நிலை குறித்து மிகப்பெரிய அச்சம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் தனது வான் எல்லையை ஏற்கனவே மூடியுள்ள நிலையில் அங்குள்ள அமெரிக்கர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தவிர, அந்த பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள வெளிநாட்டினர் மத்தியில் பெரும் பதற்றம் எழுந்துள்ளது.