தூத்துக்குடி: நிலக்கரித் தட்டுப்பாட்டால் கடந்த இரு நாட்களாக மின்உற்பத்தி முடங்கி இருந்த தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு  4,000 டன் நிலக்கரி வந்துள்ளது என அனல்மின் நிலைய நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், மின்தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் முழு உற்பத்தி திறனுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு தேவையான நிலக்கரியை தட்டுப்பாடின்றி வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கடந்த 7ந்தேதி செய்திகள் பரவின.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்த உள்ள 5 யூனிட்டுகளில் ஒன்றில் மட்டும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலக்கடி தட்டுப்பாட்டுக்கு மத்தியஅரசுதான் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜியும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்து இருப்பதாக அனல்மின் நிலையம் நிர்வாகம் அறிவித்து உள்ளது.. நிலக்கரி வந்ததை  தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலக்கரி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.