மும்பை
மும்பை நகருக்கு கத்தார் நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரவ ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டுள்ளது.
நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 2,69,47,496 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,496 அதிகரித்து மொத்தம் 3,07,249 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,26,671 பேர் குணமாகி இதுவரை 2,40,47,760 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 25,81,741 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன் உள்ளிட்ட பல இன்றியமையாத மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமுத்திர சேது 2 என்னும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.
அவ்வகையில் கத்தார் நாட்டில் இருந்து கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் தர்காஷ் என்னும் கப்பல் மூலம் 40 டன் திரவ ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் பெஹ்ரைனில் இருந்தும் 760 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மும்பை வந்தடைந்துள்ளது.