மும்பை: சிவசேனா கட்சியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், சிவசேனா கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று கூடியுள்ளது. இதில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவசேனா கட்சி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்க உள்ளனர். இவர்கள், தற்போது கவுகாத்தியில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உத்தவ்தாக்கரேயின் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கி உள்ளது. அங்குள்ள பிர்லா மாதோஸ்ரீ அரங்கத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மும்பையின் பல பகுதிகளில் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கார்கரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வெளியே உருவபொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
சிவசேனா தனது கட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மற்றும் மூத்த தலைவர்கள் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸும் எந்த சூழ்நிலையிலும் சிவசேனாவுடன் துணை நிற்போம் என்று கூறியுள்ளது.