சென்னை:
தமிழகத்தில் பான் மசாலா, குட்கா விற்பனைக்கு தடையை மீறி அனுமதி அளித்த அமைச்சர் விஜய பாஸ்கர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சட்டசபையில் இருந்து திமுக உள்பட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான் மசாலா, குட்கா போன்ற பாக்கு விற்பனை செய்வதற்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக வெளியான தகவல் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க மறுத்ததால், அதனை கண்டிக்கும் வகையில் திமுக வெளிநடப்பு செய்தது.
மறைந்த முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது போதை மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும், உயிருக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
ஆனால், தடையை மீறி இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளித்ததாக, தமிக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ள தகவல்களை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.14 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், அப்போதைய சென்னை காவல் ஆய்வாளர் ஜார்ஜுக்கும் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், இவ்வாறு 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேச சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளது.
மேலும் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் இது குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் தனபால் பத்திரிக்கை, தொலைக்காட்சியில் வந்த செய்தியை வைத்து விவாதிக்க முடியாது என்றும் கூறினார். இதனையடுத்து தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் திமுக தற்காலிகமாக வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் இருந்து வெளியே வந்த திமுக உறுப்பினர்கள் தலைமைச் செயலக 4வது எண் நுழைவு வாயில் அருகே நின்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
திமுகவைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தாலும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்பதற்காக உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு சென்றனர்.