சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டே மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதன்மூலம் மொத்த கல்லூரிகள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளின் உயர்க்கல்வி தேவையை நிறைவு செய்யும் பொருட்டு 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மே 26ந்தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே கடந்த 21.2.2025 அன்று கடலூரில் நடந்த அரசு விழா ஒன்றில் பங்கேற்றபோது தமிழ்நாட்டில் ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளின் உயர்க்கல்வி தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு 2025-26 ஆம் ஆண்டிற்கான உயர்க்கல்வித் துறை மானிய கோரிக்கையில் நீலகிரி மாவட்டம் – குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் – நத்தம், சென்னை மாவட்டம் – ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் – விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் – செய்யூர், சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் – திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் – கொளக்காநத்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் நடப்பு 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று (மே 26) தொடங்கி வைத்தார்.
மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லா பணியிடங்கள் வீதம் 11 கல்லூரிகளுக்கு மொத்தம் 132 ஆசிரியர்கள் மற்றும் 154 ஆசிரியரல்லா பணியிடங்களை தோற்றுவித்து 11 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 25 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 5 பாடப்பிரிவுகளில் ஓராண்டுக்கு 3050 மாணவர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9150 மாணவர்கள் பயன்பெறுவர்.
இந்த புதிய 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய கலை கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 4 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் 1,120 பேர் உயர்கல்வி பெறுவார்கள்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.