போலி விசா மூலம் கனடா சென்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இடைத்தரகர் மூலம் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதில் 2 பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்த வேன் ஒன்றில் பதுங்கியிருந்தது தெரியவந்தது இதனை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே பகுதியில், சாலை வழியாக நடந்து வந்த 5 பேரை பிடித்து விசாரித்த அமெரிக்க போலீசார் இவர்கள் அனைவரும் போலி சான்றிதழ்கள் மூலம் குஜராத்தில் இருந்து மாணவர்களுக்கான விசா மூலம் கனடா சென்றதும், அங்கிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றதாகவும் தெரியவந்தது.

கடும் பனிபொழிவால் அவர்களில் இரண்டு பேரின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவர்களை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனை அடுத்து கனடா நாட்டு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கும் தேடுதல் வேட்டை நடந்தது, அப்போது கனடா எல்லைக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

கடும் பனிபொழிவால் இறந்த இவர்களின் அடையாளங்களைக் கொண்டு ஓரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுவன் என நான்கு பேரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கனடாவில் இறந்தவர்கள் என்று அனைவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்காவுக்குள் ஊடுருவிய இரண்டு பேர் பயணம் செய்த வேன் ஓட்டுனரும் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கரான இவர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஆட்களை ஏற்றிச் செல்லும் கும்பலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், வேன் ஓட்டுனருக்கும் கடத்தல் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக்கூடும் என்று அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.