சென்னை: ஆயுதபூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள், வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக இன்று இரவு 12மணி வரை சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

நாளை நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதையடுத்து வெள்ளிக்கிழமை விஜயதசமியும், தொடர்ந்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் பல மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர். இதனால், இன்று காலை முதலே புறநகர் பகுதிகளில் வாகன நெரில் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசும் இன்று சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

இதன் காரணமாக சென்னையில் மக்கள் நெரிசல் ஏற்படும் என்பதால், அதை குறைக்கும் வகையில்,  மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.

நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும். மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (13.10.2021) மட்டுமே.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.