சென்னை:
தேர்தல் காரணமாக நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் சித்திரா பவுர்ணமி மற்றும் பெரிய வெள்ளி பண்டிகையுடன் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வதால், கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதுபோல போதிய பஸ் வசதிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவையொட்டி, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கட்டாய விடுமுறை விடப்பட் டுள்ளது.
மேலும், வியாழன் வாக்குப்பதிவு மற்றும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு முதலே சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் நாளை சித்திர பவுர்ணமி, மதுரை சித்திரை திருவிழா போன்ற நிகழ்வுகள் நடைபெற இருப்பதால், ஏராளமானோர் வெளியூர் செல்ல கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர்.
4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்று பகலிலும் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், திருவண்ணா மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இருந்தாலும், ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் குவிந்ததனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.