சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 4 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணியில் சுகாதாரத்துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
வடசென்னையில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக தனி வார்டு உள்ளது. இங்கு மணலி, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி, பொன்னேரி, அம்பத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, வடசென்னையை சேர்ந்த 4 பேர் காய்ச்சல் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை அந்த 4 பேரும் தங்களது மருத்துவ பரிசோதனை சான்றை பெற்று வருவதாக கூறி, வார்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாக வார்டுக்கு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், அவர்களை மருத்துவமனை முழுவதும் தேடிய நிலையில், அவர்கள் எஸ்கேப்பானது தெரிய வந்தது.
இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.