சென்னை:

4 தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்கள்  பூத் சிலிப்பை ஆவணமாக காட்டி வாக்களிக்க முடியாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர்  4 தொகுதி களுக்கும் மே 19ந்தேதி  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்க திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவி வருகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்,  அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தற்போது அந்த தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. மேலும் வாக்குப்பதிவுக்கு தேவையான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு, 4 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது,  வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 11 மாற்று ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்  என்று கூறினார்.

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக் உள்ளிட்ட புகைப்பட அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்  என்றவர்,  பூத் சிலிப்பை ஆவணமாக காட்டி வாக்களிக்க முடியாது என்றும் தெளிவு படுத்தினார்.