சென்னை: உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு – 2024 சென்னையில் வருகிற 27-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் பங்கேற்கிறார்.
‘நீலப் பொருளாதாரத்தில் பெருங்கடல்களின் நிலையான பயன்பாடு’ என்ற மையக் கருப்பொருளுடன் இந்த மாநாடு நடைபெறும் இம்மாநாட்டின் இறுதி நாளானஇ, வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைக்கிறார். இதில் நிதி ஆயோக் உறுப்பினர் விகே சரஸ்வத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்திய கடற்கரை ஏறத்தாழ 7,500 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த கடற்கரை பகுதியானது பெரும் கடல் வளங்களைக் கொண்டுள்ளது. கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல், கடல் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாத்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு 3-வது உலகப் பெருங்கடல் அறிவியல் மாநாடு -2024 (WOSC 2024), பிப்ரவரி 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவன (IIT) ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெற உள்ளது.
கடல் வளங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், பருவநிலை மாற்றம், கடல் பாதுகாப்பை உறுதி செய்தல், தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல், கடலோர சமூகங்களை ஒருங்கிணைத்தல் போன்றவை குறித்து இந்த மூன்று நாள் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும். சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஐஐடி, விஞ்ஞான் பாரதி ஆகியவை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
வருகிற 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில், மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறை செயலாளர் டி கே ராமச்சந்திரன், இந்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைச்செல்வி, விஞ்ஞான் பாரதியின் தலைவர் டாக்டர் சேகர் மாண்டே, சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி வீழிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வருகிற 28-ஆம் தேதி நடைபெறும் உச்சி மாநாட்டு நிகழ்வுகள், மத்திய புவி அறிவியல் அமைச்சத்தின் செயலாளர் எம் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.
29-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைக்கிறார். இதில் நிதி ஆயோக் உறுப்பினர் விகே சரஸ்வத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.