இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை துவங்குகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, சிராஜ், இஷாந்த் சர்மா ஆகியோரின் பந்துவீச்சின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 120 ரங்களுக்கு சுருண்டு, வெற்றியைத் தவறவிட்டனர்.

இந்த வெற்றி மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றதில்லை என்ற பெருமையைப் பெற்றது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கீட்டுகளும் எடுத்த பும்ரா, இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற கபில்தேவின் சாதனையை பும்ரா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

1980ல், கபிலதேவ் 25 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை 41 ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்தத் தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சி இருக்கும் நிலையில், ஏற்கனவே 22 போட்டிகளில் பங்கேற்றிருக்கும் பும்ரா, அடுத்த இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால் கபில்தேவின் சாதனையை முறியடித்து தனது பெயரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெறச் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.