சென்னை:
பாஜக, காங்கிரசுக்கு எதிராக 3வது அணி அமைக்க மும்முரமாக ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க விரைவில் தமிழகம் வருகிறார்.
வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து கலந்து ஆலோசிப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழகத்துக்கு வருகை தருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 11 அல்லது 12-ம் தேதிகளில் சென்னைக்கு வருகை தரும் அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் பவானர் நடத்திய டின்னர் விருந்தில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். கடந்த வாரம் தெலுங்கான முதல்வர் சந்திர சேகர் ராவையும் சந்தித்து பேசினார்.
தற்போது பாராளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழக எம்.பி.க்களும் பாராளுமன்ற அவைகளை முடக்கி வருகின்றனர்.
இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக மூன்றாவது அணி உருவாக்குவது குறித்தான ஆலோசனைகள் காரணமாக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த சூழலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி-யின் சென்னை வருகை பரபரப்பாக பேசப்படுகிறது.