சென்னை:
சென்னையில், சிறுநீரக நோயாளிகள் உள்பட டயாலிசிஸ் தேவைப்படும் ஏழை நோயாளிகளின் வசதிக்காக தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் சென்னை மாநகராட்சி சார்பில் இலவச டயாலிசிஸ் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை பெருங்குடியில் தங்கர் பவுண்டேஷன் அமைப்பு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் இலவச டயாலிசிஸ் சென்டரில் ஏற்கனவே 29 யூனிட்கள் செயல்பட்டு வந்த நிலையில், மேலும் 3 யூனிட் அமைக்கப்பட்டு மொத்தம் 32 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.
இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், டயாலிசிஸ் யூனிட்டின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய கமிஷனர், ஏற்கனவே நுங்கம் பாக்கம், ரெட்ஹில்ஸ், பெருங்குடி என 3 இடங்களில் இலவச டயாலிசிஸ் யூனிட் செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக சுமார் 200 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது பெருங்குடியில் மேலும் 3 யூனிட்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால், மேலும் பல நோயாளிகள் பயன்பெறுவார்கள் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதார) பி மதுசூதன் ரெட்டி, இந்தியா வில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2.5 லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் இறக்கின்றனர், இது இதய நோய் மற்றும் புற்றுநோய்க்குப் பிறகு மூன்றாவது பெரிய கொலை யாளி சிறுநீரகப் பாதிப்பு என்று கூறியவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 300 இயந்திரங்களை நகரத்தில் வைத்திருப்பதே எங்கள் நோக்கம், இதனால் ஏழைகளுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய முடியும் ”என்று கூறினார்.
இறுதியில் பேசிய தங்கர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி, இன்னும் சில நாட்களில், சின்னபோரூர், திருவள்ளூர் மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் மேலும் மூன்று மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் இந்த ஒவ்வொரு மையங்களிளும் குறைந்தது 10 டயாலிசிஸ் யூனிட் நிறுவப்படும் என்றும் கூறினார்.
இலவச சேவைகளுக்காக இங்க வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.