சென்னை: தமிழ்நாட்டில், மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மத்திய மாநில அரசுகள் சார்பில் பரிசு வழங்கி கவுரவிக்கபட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு கல்வி நிலையங்களில் முழுமையாக திறக்கப்படாத நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களின் பட்டியல் மட்டும் பரிந்துரைக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. அதன்படி, கற்பித்தலில் புதுமை, கல்விக்கான செயலி வடிவமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, மாணவர் சேர்க்கையை உயர்த்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட 385 பேர், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில், 5 பேருக்கு மட்டும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவிக்கிறார். மீதமுள்ள 380 பேருக்கும், அவரவர் சார்ந்த மாவட்டங்களில் செப்டம்பர் 5ந்தேதி நடைபெறும் ஆசிரியர் தின நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வான அனைவருக்கும் விருதுடன் ரூ.10,000 காசோலை, வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.