நாகை: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10ஆண்டுகளில் 3,656 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

நாகப்பட்டினத்தில்  நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.139 கோடியே 92 லட்சம் மதிப்பில் 35 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.82கோடியே 99லட்சம் மதிப்பில் 206 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 38,956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27லட்சத்து 31ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக,   நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதியில் உள்ள மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய  முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கடந்த 22ம்தேதி, ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களுடைய 5 மீன் பிடி படகுகளையும் பறிமுதல் செய்தது. உடனடியாக இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?, மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் என்னை கோட்டையில் சந்தித்து இது பற்றி பேசினார்கள். அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டது என்னவென்றால் மீனவர்களை கைது செய்தார்கள்… கடற்படை ரோந்து படகை, மீனவர் படகு மீது மோதவிட்டு மூழ்கடித்தார்கள், வலைகளை நாசப்படுத்தினார்கள், பிடித்து வைத்திருக்கின்ற மீன்கள் திருடப்படுகிறது, இதையெல்லாம் கேட்பார் இல்லாமல் நடக்கிறது என்று தங்களுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

அதுமட்டுமல்ல, அண்மை காலத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யும்போது, பெரும் தொகையை இலங்கை நீதிமன்றங்கள் அபராதமாக விதிப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் விசை படகுகளை ஏலம் விடுகின்ற இலங்கை அரசு, இப்போது அவர்களை விடுதலை செய்யும்போது அபராதமும் விதிக்கின்றது. தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாக வேதனையுடன் சொன்னார்கள்.

பிரதமர் மோடி பதவி ஏற்ற கடந்த 2014ம் ஆண்டு முதல் இது வரையிலான இந்த ஒன்றிய அரசின் 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 3,656 பேர். அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 860 பேர். மொத்தம் 611 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்களின் 116 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, நவம்பர் 22ம் தேதி வரை இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை 736 முறை தாக்கியிருப்பதாக, வெளியுறவுத்துறை இணை அமைச்சரே அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். நான் சொல்லவில்லை. இலங்கையில் என்ன பிரச்னை என்பதை தெளிவாகவும், என்னென்ன பாதிப்பு என்பதையும், ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய இணை அமைச்சர் அறிக்கையை ஆதாரத்துடன் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டிய பொறுப்பு, ஒன்றிய அரசுக்குதான் இருக்கிறது. ஆனால், செய்கிறார்களா? இல்லை.

2010ம் ஆண்டு முதல் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையே பல கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தைகள் இப்போது நடப்பதில்லை. 2016ம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவர் இடையே அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்படுகிறது. இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இலங்கையின் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தால் கொடுமைகள் அரங்கேறுகிறது.

இதுபற்றி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்ன சொல்கிறார்? இந்திய அரசின் தரப்பில் வெளியுறவுத்துறை, மீன் வளத்துறை அதிகாரிகள் நான்கு பேரும், இலங்கை அரசின் தரப்பில் நான்கு பேரும் இணைந்து ஒரு குழு அமைத்து தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு கண்டு வருகிறோம் என்று சொன்னாரே தவிர, ஆனால் இதுவரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அதற்கு முதலில், தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக ஒன்றிய அரசு பார்க்கவேண்டும்.

பிரதமர் அவர்களே, இதில் நீங்கள் தான் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். நம்முடைய மீனவர்களின் உரிமையை நிலை நாட்டுகின்ற வகையில், உறுதியான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். மிகக்கொடூரமான விதிமுறைகள், தண்டனைகள் அடங்கியுள்ள 2018ம் ஆண்டு சட்டத்தை இலங்கை அரசு முதலில் நீக்க வேண்டும். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட நீங்கள் பேசவேண்டும்.

மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்க வேண்டும். மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிக்கக்கூடிய அந்த கொடுமையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு அருகே தமிழ்நாட்டில் மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

நாகூர் நாகை சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தளபதி அறிவாலயத்தில் நடந்த நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார். தொடர்ந்து, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர், விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.