சென்னை:
சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யபட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை பெருநகரில் மொபைல் செயலி அடிப்படையில் ஏராளமான உணவு விநியோக நிறுவனங்களின் சேவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சேவைகள் மிகப் பிரபலமாக செயல்பட்டு வரும் அதே வேளையில், உணவு விநியோகம் செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

உணவு விநியோகிப்பவர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன் காரணமாக பெரும்பாலான உணவு விநியோக வாகன ஓட்டிகள் சிக்னல் விதிகளை மீறுவது, எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்பெட் அணியாமல் செல்வது, கைப்பேசி பயன்படுத்திக் கொண்டே வாகனம் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை குறைக்கும் வகையில் உணவு விநியோகம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கான சிறப்பு வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 48 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.