சென்னை: தமிழகம் முழுவதும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பதிவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. பொதுமக்களின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஏராளமான சீட்டுநிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல பதிவு செய்யாமல் முறைகேடான வகையில் சீட்டுக்களை சேர்த்து பண மோசடி செய்து வருகின்றன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளது.
பொதுவாக சிட்பண்ட் நிறுவனம் நடத்துவோர் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனங்கள் பதிவுத்துறை சீட்டு பதிவு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்காக, சீட்டு நடத்தப்படும் தொகை, சீட்டு முடியும் காலம் வரை உரிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கான ஆவணத்தை பதிவுத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் ஆனால், அதை முறையாக பதிவு செய்யாமல், ஏமாற்றும் நோக்கில் பல சீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற சீட்டு நிறுவனங்களில் சேரும் சந்தாதாரர்களால் செலுத்தப்படும் பணத்திற்கு உரிய பாதுகாப்பு கிடையாது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தமிழ்நாட்டில், பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் செயல்பாடு பதிவுத்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதுடுன், பதிவு பெறாத சீட்டு நிறுவனங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
இதையடுத்து, பொதுமக்களின் புகாரின் பேரில் ஏராளமான சீட்டு நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்தாண்டில் மட்டும் 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, 2621 சீட்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், அந்த நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று பதிவுத்துறை தெரிவித்து உள்ளது. மேலும், பதிவு பெறாமல் சீட்டு நடத்தப்படுவது தெரிய வந்தால் அந்த நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்யவும், அந்த அந்த நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .