மும்பை: மும்பையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
பெடார் சாலையில் உள்ள அந்த மருத்துவமனையில் ஏற்கனவே பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் அதே மருத்துவமனையில் பணியாற்றும் மேலும் 36 செவிலியர்களுக்கு கொரோனா பரவி இருப்பது பரிசோதனைகள் முடிவில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. இதே நகரத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 250ஐ கடந்துள்ளது. ஆனால் மருத்துவமனையில் ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அதன் நிர்வாகம் வெளியிடவில்லை.
பாதிக்கப்பட்ட செவிலியர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர். அங்கிருந்த 120 பேர் பரிசோதிக்கப்பட்டதில், 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட வில்லை என்று அதன் ஊழியர்கள் கூறி உள்ளனர்.
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அவர்கள் சரியாக கையாளவில்லை என்பதால் தொற்று வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளுக்கு நோய்த்தொற்றை மேலும் பரப்ப நாங்கள் விரும்பவில்லை. அரசு தலையிட்டு மருத்துவமனைகளில் பரவும் கொரோனா சங்கிலியை எவ்வாறு உடைப்பது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறி இருக்கின்றனர்.