சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஊரடங்கை மீறி வெளியே சென்றவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 10 நாட்களில் 35 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமான தாக்கத்தை உருவாக்கி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் மே 10-ந் தேதி முதல் அமலில் இருந்து வரும் ஊரடங்கு, கடந்த 24-ந் தேதி முதல் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்காக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியில் சுற்றியதாக கடந்த 10 நாட்களில் 32 ஆயிரத்து 980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் ஊரடங்கை மீறியதாக 35 ஆயிரத்து 629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.