செண்டியாகோ

டதுசாரியினரும் முன்னாள் மாணவர் தலைவருமான காப்ரியல் போரிக் சிலே நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

சிலே நாட்டில் கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் நடந்த மாபெரும் போராட்டம் நாட்டையே உலுக்கியது.  நல்ல கல்வி, உதவித் தொகை அதிகரிப்பு, உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடந்தது.   இந்த போராட்டத்தால் தற்போது பதவியில் இருந்து வெளியேறும் அதிபர் பினேரா அரசியலமைப்பை மாற்றி அமைக்க வாக்கெடுப்பு நடத்தும் நிலை உண்டானது.

பெரும்பான்மையான சிலி மக்கள் இந்த வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்பு வரைவ உருவாக்க வாக்களித்தனர்.    இந்த புதிய அரசியலமைப்பு வரும் 2022ஆம் ஆண்டு மத்தியில் உருவாக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்பட உள்ளது.   தற்போது சிலி நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற 35 வயது இளைஞரான காப்ரியல் போரிக் பதவி ஏற்க உள்ளார்.

இடதுசாரி தலைவரான போரிக் ஏற்கனவே மாணவர் தலைவராக இருந்துள்ளார்.   அவர் தனது தேர்தல் பரப்புரையில் பொதுச் சுகாதார அமைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி,  பெரும் செல்வந்தர்களுக்கு அதிக வரி, தனிநபர் உதவித் தொகை அதிகரிப்பு என வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இந்த தேர்தலில் 99.95% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் போரிக் 55.87% வாக்குகளைப் பெற்றுள்ளதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.   இவரை எதிர்த்து போட்டியிட்ட வலது சாரி தலைவர் ஜோஸ் ஆண்டோனியா காஸ்ட் 44.1% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.  வரும் மார்ச்  மாதம் 11 ஆம் தேதி போரிக் சிலே நாட்டில் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.