நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
ஓடிவிட்டன 34 ஆண்டுகள்..  வியக்க வைத்த வாழப்பாடி…
மிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தபோது, வாழப்பாடி ராமமூர்த்தியை அவருக்குப் பிடித்தமான தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பிரதமர் நரசிம்ம ராவ் நியமனம் செய்தார் அடுத்த கொஞ்சம் காலத்திலேயே தமிழ்நாட்டிற்கும் கர்னாடகாவுக்கும் இடையில், காவேரி நீர் பங்கீடு பிரச்சனையில், முக்கியத் திருப்பம் வந்தது
உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை கர்நாடகவுக்கு சாதகமாக்கி செயல்பட்டார் பிரதமர் நரசிம்ம ராவ் “இது, தமிழ்நாட்டுக்கு எதிரான – நீதிக்குப் புறம்பான செயல்” என்று, நரசிம்மராவுக்கு, கடிதம் எழுதினார் அமைச்சரவையில் இருந்த வாழப்பாடி. பத்து நாட்கள்வரை பதில் இல்லை.
நண்பர்களைக் கூட கலந்தாலோசிக்காமல் ஜூலை 29, 1991 -ல் அமைச்சர் பதவியை ஆரவாரம் இல்லாமல் ராஜினாமா செய்துவிட்டு, டெல்லியிலிருந்து சென்னைக்கு பறந்து வந்தார். ”இவரை வெச்சி நாலு காரியம் செய்துக்கலாம் என்று பார்த்தால், நம்ம தலைவரு இப்படி செய்துட்டாரே…” என்று, தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளும் எம்பி, எம்எல்ஏக்களும் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார்கள்
நான் வாழப்பாடியாரிடம் ” வாராது போல் வந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததில் ஆதரவாளர்கள், வருத்தமாக இருக்கிறார்கள்..” என்றேன் ! ”நீ என்னப்பா நினைக்கிறே…. அதை சொல்லு….” என்றார் ! கொஞ்சம் யோசிச்சு, ”இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ரெண்டுபேரும் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் போறாங்க என்று, பரபரப்பாக செய்தி வரும். ஆனா, அவுங்க யாரும் கொடுக்காத பதவியை நரசிம்ம ராவ்தானே கொடுத்தார்.
அந்த பதவியை தூக்கிக் கடாசுனா எப்படி ?…” என்றேன்.
நரசிம்ம ராவுக்கு பிரதமரா நீடிக்க கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்களின் தயவு தேவை. அதுக்காக, அவர் நெளிகிறார். வளைகிறார்…. இதை நான் வெளியே சொல்ல முடியாது. ஆனா, நான் என் போக்குல என் பதவியை ராஜினாமா செய்வதை யார் தடுக்க முடியும் ? ” என்றவர்,
யோவ்… அதெல்லாம் இருக்கட்டும், கொள்கை முக்கியமா?பதவி முக்கியமா ? ” என்று என்னை கேட்டார்
”கொள்கைதான் முக்கியம்”
“இப்ப சொல்லு, ”நான் செய்தது – சரியா, தப்பா ?”
” நீங்க செய்தது சரிதான்..”
”ஏம்ப்பா… சத்தம் கொறைச்சலா இருக்கு ?” என்று கேட்டுவிட்டு, சொன்னார் ,
”யோவ் பதவி – வரும், போகும். காவேரி வரலாறு என்பது, தன் போக்கில் போகும்.திரும்ப வராது…. நீகூட என்னை புரிஞ்சிக்கலியே…” என்று சொல்லிவிட்டு, வருத்தப்பட்டார் !
‘என்னோட நண்பர் மத்திய அமைச்சர்…’ என்று, மகிழ்ச்சியாக சொல்லிக்கொண்டிருந்த எனக்கு, “மகிழ்ச்சி – மிஸ் ஆன நாள்.. வாழப்பாடியார் மத்திய அமைச்சர் பதவியை காவிரி நீர் பிரச்சனைக்காக உதறிய பொன்னாள்”
தமிழர் நலனுக்காக தனது கண்டனத்தை பதிவு செய்ய, தனக்கு முதல்முதலாகக் கிடைத்த மத்திய அமைச்சர் பதவியை, உதறித் தள்ளிய என்னோட நண்பர் வாழப்பாடியார், மனிதரில் புனிதர்
– 1991 ஜுலை 29ல் வாழப்பாடியார் ராஜினாமா பற்றி தன் அனுபவத்தை பின்னாளில் இப்படித்தான் விவரித்திருந்தார், அவரின் நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான மறைந்த அண்ணன் எம்பி திருஞானம் அவர்கள்..
நமக்கு தனிப்பட்ட ரீதியில் மிகவும் பிடித்த அரசியல் தலைவர்களில் வாழப்பாடி ராமமூர்த்தி மிகவும் வியப்பானவர். கல்வி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி எதுவாக இருந்தாலும், இவருக்கு இந்த உதவி தேவைப்படுகிறது என்று போய் நின்றால் போதும், சிறிய உதவிகள் என்றால் உடனே செய்து விடுவார். அதேபோல பெரிய உதவிகள் என்றாலும், என் பங்குக்கு இவ்வளவு மட்டும் செய்கிறேன் என்று அதையும் உடனே செய்து விடுவார்.
ரு தொழிற்சங்க வாதியாக தொழிலாளர்களுக்காக வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் நடத்திய பல்வேறு சட்டப் போராட்டங்களை அண்ணன் எம்.பி. திருஞானம் நம்மிடம் பெருமையோடு சொல்லச் சொல்ல தருணங்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை.