சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சென்னையில் 27 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார். 
தென்னாப்பிரிக்கா நாட்டில் கண்டறிப்பட்டுள்ள பிறழ்வு வைரசான ஒமிக்ரான், அதிவேகமாக பரவி வருகிறது. உலகின் 50க்கும் மேற்பட்ட நாடு களில் பரவி உள்ள நிலையில், தமிழகம் உள்பட இந்தியாவிலும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், மேலும் 43 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே கூறியிருந்தார். அவர்களது ரத்த மாதிரி பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும், குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த சுமார் 1 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் தொற்று அறிகுறி உள்ள 18,129 பேரில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதிகபட்சமாக சென்னையில் 27 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தலைநகர் டெல்லி 2வது இடத்திலும் உள்ள நிலையில், தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது.