அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து. பெமா காண்டு தலைமையில் 33 எம்.எல்.ஏ. க்கள் அக்கட்சியிலிருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி அளித்தனர்.
60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில் 43 எம்.எல்.ஏ.க்களுடன் அருணாச்சல் மக்கள் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தது. பேமா காண்டு முதல்வராக இருந்தார்.
இந்த நிலையில் பேமாகாண்டு, பா.ஜ.க.வுக்கு சாதமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவரையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் நீக்கி கட்சி தலைமை முடிவெடுத்தது.
இந்நிலையில் பேமா காண்டு உள்ளிட்ட 33 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதையடுத்து ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியில் தற்போது 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதால் அக்கட்சி ஆட்சியை இழக்கிறது.
இதற்கிடையே, புதிதாக இணைந்த 33 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. புதிய ஆட்சிமைக்க உரிமை கோரியுள்ளது. இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் பேமா காண்டு சபாநாயகர் முன்பு நிறுத்தினார். இதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.
60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல் பிரதேச சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 47 ஆக உயர்ந்துள்ளது.
“கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.