மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை காரணமாக 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் ஒரேநாளில் மரணமடைந்துள்ளனர்.

செப். 30 – அக். 1க்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் 24 பேர் மரணடைந்தனர். இதில் 12 குழந்தைகள் 12 பெரியவர்கள் அடக்கம்.

இந்த நிலையில் இன்று மேலும் 7 பேர் இறந்திருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட பெரியவர்கள் உட்பட கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

70 முதல் 80 கி.மீ. சுற்றுவட்டாரத்திற்கு இது ஒன்றே மூன்றாம் நிலை மருத்துவ காப்பகம் என்பதால் ஏராளமான நோயாளிகள் வருவதை அடுத்து மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதனை மறுத்துள்ள மருத்துவமனை அதிகாரிகள் நோயாளிகள் பலரும் நோய் முற்றிய நிலையில் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததாலேயே அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து உயர்மட்ட மருத்துவக் குழு விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.