சென்னை : ‘தமிழகத்தில் சாலை விதிமுறைகளை மீறியாபாக 30,383 ஓட்டுனர்உரிமங்கள், சஸ்பெண்டு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில், சாலை போக்குவரத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ளும் வகையில், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது போதையில் வாகனத்தை ஓட்டுதல், அலைபேசி பயன்படுத்தியவாறு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல், சிக்னல் விதிகளை மீறுதல் போன்றவற்றை போக்கு வரத்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் போக்குவரத்து விதி மீறல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆண்டுதோறும், 8 முதல், 10 சதவீதம் வரை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள போக்குவரத்து காவல்துறை, தமிழகத்தில் சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைக்க, சாலை பாதுகாப்பு நிதி வாயிலாக கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதிமுறைகளை மீறுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.
மேலும், சாலை விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்து போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்களின் மீது,போக்குவரத்து போலீசார் அளிக்கும் பரிந்துரைகள் படி, ஓட்டுனர் உரிமங்களை சஸ்பெண்ட் செய்து வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, கடந்த ஆறு (ஜூலை வரை) மாதங்களில் மட்டும், 30,383 ஓட்டுனர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன என்றும், சாலை விதி முறைகள் மீறுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.