காந்திநகர்: ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 21,000 கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதை பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இடைக்கல அரசு அமைத்துள்ளனர்.  இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் துறைமுகத்துக்கு  சரக்குகப்பல் ஒன்று வந்தது. இந்த கப்பல் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் சென்று, செப்டம்பர் 13-14 அன்று ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் வழியாக குஜராத்துக்கு வந்தது. இதில் ஆந்திராவுக்கு வந்த பார்சலில் 21,000 கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதை மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள முந்திரா துறைமுகத்தில் கப்பலில்இருந்து இறக்கப்பட்ட இரண்டு கொள்கலன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் போதைப் பவுடர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது சர்வதேச சந்தையில் ஏறத்தாழ 21,000 கோடி என்றும், சுமார் 3,000 கிலோ ஆப்கான் ஹெராயின் போதை பொருள் என்றும் தெரவித்து உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத அளவில், மிகப் பெரிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில், செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஆப்கானிஸ்தான் கந்தஹாரைச் சேர்ந்த நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டு கொள்கலன்களை டிஆர்ஐ தேடியதாகவும், அப்போது குறிப்பிட்ட கொள்கலனில், 1,999.58 கிலோ ஹெராயின் இரண்டு பைகளில் ஒரு கொள்கலனில் அடைக்கப்பட்டிருந்தது மற்றும் 988.64 கிலோ ஹெராயின் ஒரு பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பவுடை ஆய்வு செய்த காந்தி நகர் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் (சிஎஃப்எஸ்எல்) வல்லுநர்கள், இது ஆப்கானிஸ்தானில் தோன்றிய “மிக உயர்தர” ஹெராயின் என்று கண்டறிந்தனர். சர்வதேச சந்தையில் ஹெரோயின் மதிப்பு ஒரு கிலோவுக்கு 7 கோடி என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர், இது இந்தியாவின் மிகப்பெரிய கைப்பற்றல் ஆகும்.

இந்த கப்பலில் பணியாற்றும் பலர்  ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் விசாரணைக்கு  அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறத.

பாகிஸ்தானும், தலிபானில் உள்ள இந்திய விரோதிகளும் இணைந்து ஆப்கானிஸ்தான் ஹெராயினை இந்தியாவிற்குள் கொண்டு வந்து பயங்கரவாத நடவடிக்கை களுக்கு நிதி திரட்ட முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகள் நம்புகின்றன. அதனால், இந்த கடத்தல் விவகாரம் குறித்து தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், சர்வதேச அளவில் அதிக தாக்கங்கள் இருப்பதால் இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.