சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளதால் அங்கு 3000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். இன்று மாலை 4.45 மணிக்கு அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தற்போது விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை தீவுத் திடலில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலிருந்து விஜயகாந்த்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாகத் தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

நேற்று இரவு முதல் விஜயகாந்த்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் சென்னை தீவுத்திடலில் குவிந்துள்ளனர்.

இன்று காலை தீவுத்திடலுக்குக் கொண்டு வரப்பட்ட விஜயகாந்த்தின் உடல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிறகு இங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.

சென்னை தீவுத்திடலில் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் அஞ்சலி செலுத்த உள்ளதால், தீவுத்திடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.