காத்மண்டு: எவரெஸ்ட் சிகர பிராந்தியத்திலிருந்து, சுமார் 3000 கிலோ அளவுள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேபாள அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 14 முதல் நடத்தப்படும் சாகர்மாதா சுத்தப்படுத்தும் முகாமின் மூலம், இந்தளவிற்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றில், 2000 கிலோ குப்பைகள் ஒக்கால்டுங்கா என்ற பகுதிக்கும், 1000 கிலோ குப்பைகள் நேபாள தலைநகர் காத்மண்டுவிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. இப்பணிக்காக, நேபாள ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு தேவையான உணவு, நீர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணிக்காக, நேபாள மதிப்பில் 23 மில்லியன் நேபாள ரூபாய்கள் செலவிடப்படும் என்று துறைசார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்கள், மொத்தம் 4 பிரிவுகளாகப் பிரிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியின் மூலம், மொத்தமாக 5000 கிலோ குப்பைகள் சேகரிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.