சென்னை: தமிழ்நாட்டில் திருடு போன பல சிலைகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல சிலைகளை சிலை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை யில் ஒருவரது வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு நடத்திய காவல்துறையினர் 2 பழமையான சிலைகளை மீட்டனர்.

சென்னை அண்ணா நகர் 5-வது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்துமாறு, டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதனப்டி, கண்காணிப்பாளர் ரவி, துணை கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு போலீஸார், அந்த வீட்டில் நேற்றுசோதனை நடத்தினர்.

அப்போது, அங்கிருந்த நடராஜர், அமர்ந்த நிலையில் இருக்கும் மாரியம்மன் ஆகிய 2 சிலைகள் குறித்து விசாரணை நடத்தினர். அந்த சிலைகள் தங்களத பெற்றோர் காலத்தில் இருந்தே தங்களிடம் இருப்பதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.  ஆனால், சிலை எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.

இதையடுத்து அந்தசிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தசிலைகள் குறித்து ஆய்வு செய்த தொல்லியல் துறையினர், அவை கோயில் உற்சவர் சிலைகள் என்பதும், 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்றும், இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் தெரிவித்து உள்ளனர்.