சென்னை:
தற்போது, ‘மை ஸ்டாம்ப்’ என்கிற தலைப்பில், நீங்கள் விரும்பிய புகைப்படம் கொடுத்து, போஸ்ட் ஸ்டாம்பில் உங்கள் புகைப்படத்தையோ அல்லது நீங்கள் விரும்பும் வேறு படத்தையோ பிரத்யேகமாக இடம்பெற செய்யலாம்.
போஸ்ட் ஸ்டாம்பில் பெரும் தலைவர்களின் புகைப்படங்கள்தான் இடம் பெறும். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திரைப்படத்தில், “போஸ்ட் ஸ்டாம்பில் என் படம் இடம் பெற வேண்டும்” என்பதையே லட்சியமாகச் சொல்வான் நாயகன்.
ஆனால் வெளிநாடுகளில் குறிப்பிட்ட தொகை அளித்தால் யாருடைய படமும் ஸ்டாம்பில் இடம்பெறும். அது போல் ஆஸ்திரியா நாட்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்டாம்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை இடம் பெறச்செய்தார் அக் கட்சி அபிமானி ஒருவர்.
இப்போது அதே போன்ற முறையை இந்திய அஞ்சல் துறையும் கொண்டுவந்துவிட்டது.
‘மை ஸ்டாம்ப்’ என்கிற இந்தத் திட்டம் மூலம், 300 ரூபாயும் உங்களுக்குப் பிடித்த புகைப்படத்தையும் கொடுத்தீர்களானால் 12 ஸ்டாம்புகளில் உங்கள் படம் இடம்பெறும்.
அதேபோல் தனியார் நிறுவனங்களும் தங்களது லோகோ, போட்டோவை ஸ்டாம்பில் வெளியிடலாம். இதற்காக ரூ.12 லட்சம் கட்டி 60 ஆயிரம் ஸ்டாம்புகள் வரை பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து தகவல் அறிய மாவட்ட அஞ்சலகங்களை அணுகலாம். அல்லது
http:www.epostoffice.gov.in என்ற வலைதளத்தில் விவரம் தெரிந்துகொள்ளலாம்.