சென்னை

ரசு நிதியில் காசிக்கு ஆன்மீக பயணம் செய்ய 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அரசு நிதியில் காசிக்கு ஆன்மீகப் பயணம் செய்ய 200 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்..

அதில் அமைச்சர்,

”2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ‘ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்’ என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 200 நபர்கள் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் “ஆன்மிகப் பயணமாக ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்குக் கடந்த ஆண்டு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதைப் போல, பக்தர்கள் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 300 நபர்களைத் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களைச் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்படுவர். மேலும் ஆன்மிக பயணம் குறித்த விவரங்களுக்குச் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்து கொண்டு பயன்பெறலாம்”.

என்று தெரிவித்துள்ளார்.