எகிப்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேலி ஆஃப் கிங்ஸ் (Valley of Kings) பகுதியில் அமைந்துள்ள பாறைக் கல்லறைகளில், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துகளிலும், சில பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதத்திலும் உள்ளன.
இந்தக் கண்டுபிடிப்பு, சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையே வணிகத் தொடர்புகள் இருந்ததற்கான முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் லோசான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராவுச் மற்றும் பிரான்சின் EFEO அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் சார்லட் ஸ்மிட் ஆகியோர், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற தமிழ் கல்வெட்டு ஆய்வு மாநாட்டில் இதை அறிவித்தனர்.
வேலி ஆஃப் கிங்ஸில் உள்ள ஆறு பாறைக் கல்லறைகளில் இந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 20 கல்வெட்டுகள் தமிழியிலும், மீதமுள்ள 10 கல்வெட்டுகள் சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதத்திலும் உள்ளன.
இதன் மூலம், கி.பி. 1 முதல் 3-ஆம் நூற்றாண்டுகளுக்குள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த வணிகர்கள் எகிப்துக்கு வந்திருந்தது தெரிய வருகிறது. அவர்கள் வாசனை மசாலா பொருட்கள் உள்ளிட்ட வணிகப் பொருட்களை விற்பனை செய்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கல்வெட்டுகளில் “சிகை கொற்றன்” (இன்றைய தமிழில் சிகை கொறன்) என்ற தமிழ் வணிகரின் பெயர் முக்கியமாக இடம் பெற்றுள்ளது. அவர் ஐந்து கல்லறைகளில் எட்டு முறை தனது பெயரை பொறித்துள்ளார். அவர் பண்டைய தமிழகப் பகுதியில் இருந்து கடல் வழியாக பயணம் செய்த வணிகராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

‘சிகை கொற்றன்’ என்ற பெயர், சேரர் காலத்தில் வழிபட்ட கொற்றவை தேவியிலிருந்து வந்திருக்கலாம் என்றும், இது சிலப்பதிகார காலத்தைச் சேர்ந்த பெயராக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு கல்வெட்டில், ஒரு நபர் “க்ஷஹராத அரசரின் தூதர்” என சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“எகிப்தில் தமிழி கல்வெட்டுகள் இருப்பதை கண்டபோது எனக்கே நம்ப முடியவில்லை. லட்சக்கணக்கானோர் வந்துச் சென்ற இந்த இடத்தில், இதுவரை யாரும் இதை கவனிக்கவில்லை,” என்று பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராஉச் கூறினார்.
இந்த கல்வெட்டுகள், தமிழியின் கல்வியியல் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துவதாக பேராசிரியர் சார்லட் ஸ்மிட் தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 100 தமிழி கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டால், எகிப்தில் கிடைத்த 20 தமிழி கல்வெட்டுகள் மிக முக்கியமானவை என்றும் அவர் கூறினார்.
பண்டைய கால இந்திய வணிகர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்கலாம் என்றும், கிரேக்க மொழியையும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தொல்லியல் துறையின் கல்வி ஆலோசகர் பேராசிரியர் கே. ராஜன், சிந்துவெளி நாகரிக காலம் முதல் இந்தியா கடல் வழி வணிகத்தில் முன்னணியில் இருந்தது என்றும், குறிப்பாக மிளகு போன்ற பொருட்களை ரோமர்கள் பெரிதும் விரும்பினார்கள் என்றும் கூறினார்.
இந்த புதிய கண்டுபிடிப்புகள், இந்தியா–ரோமப் பேரரசு இடையிலான வணிக உறவுகளையும், தமிழி எழுத்தின் ஆரம்ப காலப் பயன்பாட்டையும் மீண்டும் விவாதத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]