சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், பெண்களுக்கான 30% இடங்களை முன்கூட்டியே ஒதுக்கிவிட்டு பணி நியமனங்களை நடத்தக் கூடாது என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, பெண்களுக்கு அரசுப்பணிகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தொடர்பிலான அறிவிப்புகளை தமிழக சட்டசபை பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் உறுதி அளித்திருந்தார். அந்த வகையில், தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள்.

மேலும் 100% நியமனத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தேர்வு கட்டாயமாக்கப்படும். அரசுப் பணிகளில் பெண்களுக் கான இட ஒதுக்கீடு 30% லிருந்து 40% மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் TNPSC சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், அரசுப்பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30% என்று குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது, அரசுப் பணிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களில் இட ஒதுக்கீடு விதி பொருந்தும் பதவிக்கும் அல்லது மற்ற பதவிகளுக்கும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 30% இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் இட ஒதுக்கீடு விதிகளுக்கான பதவிகளில் தனிப்பிரிவு மற்றும் பொதுப்பிரிவில் 30% பெண் விண்ணப்பதாரர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் பெண்கள் அல்லது மூன்றாம் பாலினத்தவர்கள் 30% இட ஒதுக்கீட்டில் போட்டியிட தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக சசிதரன் என்பவர் பொதுநலவழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

தீர்ப்பில்,100 சதவிகித இடங்களை மெரிட் மற்றும் சமூக ஒதுக்கீடுகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும்போது, ஏற்கனவே 30 சதவிகிதம் அல்லது அதற்கு மேலோ பெண்கள் இருந்துவிட்டால், தனியாக 30 சதவிகிதம் ஒதுக்க அவசியமில்லை என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 சதவிகிதத்திற்கும் கீழ், பெண்களின் பிரதிந்தித்துவம் இருக்கும்பட்சத்தில் 30% ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீட்டை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.