சென்னை: மேலும் 30 பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 20,000 பால் எடுக்கும் இயந்திரம் வாங்கப்படும் என சட்டப்பேரவை யில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர்கள் நேரு, ராஜ கண்ணப்பன் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாவதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்ததும், சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன.
முன்னதாக பேரவையின் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் நேரு, சென்னையில் இந்த நிதியாண்டில் 30 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், 273 பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சி அமைந்த பிறகு ரூ.81 கோடியில் 204 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 307 பூங்காக்கள் ரூ.24 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கையில் பால் கறந்தால் குறைவாக வருகிறது, அதனால் எனது வீட்டிலேயே சோதனை முறையில் மெஷின் வைத்துள்ளேன். ஒரு பால் கூட்டுறவு சங்கத்துக்கு 2 மெஷின் என்ற அடிப்படையில் 20,000 எந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.
பென்னாகரத்தில் பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால் 5,000 லி. கொள்ளளவு கொண்ட பால் குளிரூட்டு நிலையம் அமைக்கப்படும். பால் உற்பத்தியை அதிகரித்து கொடுத்தால் குளிரூட்டும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.