சென்னை:

மிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது காரணமாக அவர்மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர்மீது  கடந்த 1998ம் ஆண்டைய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அவர் பதவி இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த நிலையில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து, அதிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டால், பாலகிருஷ்ணா ரெட்டி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகும்.

இந்த நிலையில், தற்போது அவரது தண்டனையை மேல்முறையீட்டுக்கு வசதியாக நிறுத்தி வைப்பதாக சிறப்பு நீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

வழக்கு விவரம்:

1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஓசூர் அருகே உள்ள கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள்  போராட்டம் நடத்தினர். அந்த சமயத்தில், அங்கு வந்த அரசு வாகனங்கள், பேருந்துகள், காவல்துறை வாகனங்கள்மீது கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவம் நடைபெற்றது.

இந்த சம்பவத்துக்கு பின்னணியாக பாலகிருஷ்ணாரெட்டி செயல்பட்டதாக குற்றம் சாட்டப் பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக   கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதி மன்றத்திற்கு சமீபத்தில்  மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்தசென்னை சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்10 ஆயிரத்து ஐநூறு  அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மேல்முறையீடு செய்வதற்காக வசதியாக அவரது தண்டனை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்து உள்ளது.

பாலகிருஷ்ணா ரெட்டி பதவி விலகினால் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயரும் வாய்ப்புள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக தமிழக அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.