டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள  திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை  உச்சநீதி மன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் குற்றவாளி என அறிவித்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து 2023ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.  மேலும் பொன்முடி தரப்பு வேண்டுகோளை ஏற்று,  இந்தத் தண்டனை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால், பொன்முடி சிறையில் அடைக்கப்படாத நிலையில் இருந்து வருகிறார்.

இதையடுத்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொன்முடிக்கு வழங்கப்பட்ட அவகாசம் ஜனவரி 21ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,   உச்சநீதிமன்றத்தின் உத்தேச விசாரணை பட்டியலில் வரும் வெள்ளிக்கிழமை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.