மதுரை: பத்திரபதிவில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறினார்.
மதுரையில் இன்று செய்தியளார்களை சந்தித்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படை யாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. அதற்கான ஆதாரங்களும் உள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க, உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள், 90 சதவீதம் பதிவு செய்யப்பட்ட அன்றே வழங்கப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் பத்திரப்பதிவு முறை மேலும், எளிமையாக்கப்படும். போலி ரசீதுகள் மூலமாக வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும், நடைமுறை சட்டத்தின் படி ஐந்து ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வழிவகை இருக்கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்தால் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா கொண்டுவரப்படும்.
அதுதவிர, முறைகேட்டில் தொடர்புடைய பிற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.