ஈரோடு:

னைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்த தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இன்று தந்தை பெரியார் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,   ஈரோட்டிலுள்ள பெரியார், அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது வதந்தி என்றும் அரசின் சார்பில் அதுபோன்ற முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.

மேலும்,  5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு கோரப்பட்டு உள்ளது.  அந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். அதன்பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

அமித்ஷாவின் இந்தி தேசியமொழி என்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும், இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.