டில்லி:

முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை ‘தலாக்’ கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்த பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘முத்தலாக் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

அதன்படி, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டவரைவு தயார் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வாய்மொழியாக, எழுத்துப்பூர்வமாக, இ- மெயில் உள்பட தகவல்தொடர்பு உபகரணங்கள் மூலம் உடனடியாக முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.