சென்னை: தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி,  ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,   தமிழகஅரசு நடவடிக்கை எடுக்குமா? என பயணிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பண்டிகையின் போது அளிக்கப்படும் தொடர் விடுமுறையின் போது பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த காலக்கட்டத்தில், போதுமான அரசு அரசு பேருந்து கிடைக்காததாலும், அரசு பேருந்துகளில் இருக்கை வசதி மற்றும் சரிவர பராமரிக்கப்படாததாலும், ஏராளமான பயணிகள் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். இதை தனக்கு சாதகமாக்கி தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதை கண்டிக்க வேண்டிய தமிழகஅரசு, ஒப்புக்கு சப்பானியாக, சோதனை நடத்தப்படுவதாகவும், அபராதம் வசூலிக்கப்படுவதாகம் வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருகிறது.

இதுபோன்ற புகார்கள் எழும்போதெல்லாம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்படும். ஆனாலும், ஆம்னி பேருந்து கட்டணம் குறைந்தபாடில்லை என்கின்றனர் பேருந்து பயணிகள்.

இந்த நிலையில்,  கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள், வரும் 1ந்தேதி மீண்டும் சென்னை உள்பட நகரப்பகுதிகளுக்கு திரும்பும் நிலையில், அன்றைய தினம்,    ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, நெல்லையில் இருந்து சென்னை திரும்ப சுமார் ரூ.2400-2700 என்ற வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ஜன.1ஆம் தேதி ரூ. 3,500 முதல் ரூ.4,500 வரை உயர்த்தப்பட்டு கட்டண கொள்ளை அரங்கேறியுள்ளது. மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு சுமார் ரூ.700 முதல் ரூ.1000 என்ற வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 1ஆம் தேதி ரூ. 2,900 வரையும்,  கோவையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.1300 என்ற வழக்கமான கட்டணம், ஜன.1ஆம் தேதி ரூ. 3000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,  ஆம்னி பேருந்துகளின் கட்டண  கொள்ளைக்கு முடிவு கட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.